Friday, February 2, 2024

விஜய் ஆரம்பித்த இக்கற்ற கட்சி!

தமிழர் அரசியலில் இன்னும் ஒரு நடிகர்!

அமுதன் ஆர்.பி.


நடிகர் விஜய்யின் அரசியல் வரவைக் கொண்டாடும் பலருக்கு தமிழ்நாட்டு அரசியல் பற்றி புரிதல் இல்லை என்று சொல்லலாம் அல்லது தமிழ்நாட்டு அரசியல் மீது (பார்ப்பனர்கள் உருவாக்கிய ) வெறுப்பு என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தை எடைக்குறைப்பு செய்ய நினைக்கும் சக்திகள் தான் தொடர்ந்து அந்த நடிகர் வருவாரா இந்த நடிகை வருவாரா என்று பரப்புரை செய்கின்றனர்.
தமிழர்களுக்கு அரசியல் அறிவு இல்லை, அவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், காசுக்கு வாக்களிப்பவர்கள், சினிமாவுக்கு மயங்குபவர்கள், குடிப்பவர்கள் என்று நம்மைத் தொடர்ந்து மட்டம் தட்டும் வேலைகளும் சதிகளும் நடக்கின்றன.
இந்தியாவிலேயே அதிகம் வறுமையைக் குறைத்த மாநிலம் என்றோ அதிகத்தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் என்றோ அதிக ஆட்டோமொபைல் உற்பத்தி செய்கிற மாநிலம் என்றோ அதிக மருத்துவர்கள் இருக்கிற மாநிலம் என்றோ அதிகப் பெண்கள் வேலைக்குப் போகிற, அதிக அரசுப் பேருந்துகள் ஓடுகிற, கல்லூரிக்குப் போவோர் விகிதம் அதிகம் இருக்கிற மாநிலம் என்றோ இவர்கள் சொல்லமாட்டார்கள்.
மிகக்குறைவான ஆறுகள், ஒரே ஒரு பருவமழைக்காலம் ( அது கூட புயலாகத் தான் தாக்கும்) இந்தியாவின் தலைநகரில இருந்து வெகு தூரம் என பல எதிர்மறை அம்சங்கள் இருந்தும் கூட நாம் வளர்ந்துள்ளோம். இது ஒரு கூட்டு முயற்சி மற்றும் வெற்றி.
தமிழ்நாட்டு மக்கள் மதநல்லிணக்கம், தமிழ்ப்பற்று, பெண்கள் சுதந்தரம், பார்ப்பனர் அல்லாத பக்தி, முன்னேறும் உத்வேகம், பல பண்பாடுகளுடான அறிமுகம், பெரிதான வன்முறையற்ற வாழ்க்கை முறை, கல்வியில் ஆர்வம், இந்தியாவை எட்ட நின்று ஆதரிக்கும் அளவான தேசப்பற்று, எளிமை, அந்நியர்களை அரவணைக்கும் பெருந்தன்மை கொண்டவர்கள்.
வள்ளுவர், பண்டிதர், வள்ளலார், சிங்கார வேலர், சிதம்பரனார், பெரியார், அண்ணா, கலைஞர் மாதிரியான அறிஞர்கள் வாழ்ந்த, வேலை செய்த நிலம் இது.
பெரியாரிய, அம்பேத்கரிய, மாரக்சிய, தமிழ்த்தேசிய, பெண்ணிய, சூழலியல் மற்றும் பாலியல் சிறுபான்மையினர் அரசியற் கொள்கைகள் நம்மை வழிநடத்துகின்றன அல்லது முக்கியப் பங்காற்றுகின்றன.
நமக்கென்று தனித்த குணம் இருப்பதனால் தான் நாம் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக இருக்கிறோம். இங்கே விழிப்பான சிவில் சமூகம் உயிர்ப்புடன் இருக்கிறது.
இந்தியாவின் பிரதானப் பிரச்சனையான பார்ப்பனியத்தை நம்மைப் போல எந்த மாநிலமும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து வெற்றிபெறவில்லை. இப்போது தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி பார்ப்பனர் அல்லாதோர் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர் என்று பிற மாநிலங்களில் ஆய்வு நடத்தப்போகிறார்கள். நாம் பல நூறு மைல் தூரம் முன்னேறியிருக்கிறோம்.
நம்மை இழிக்கவும் பழிக்கவும் பல நடிகர்களை நம் முன் இறக்கிப் பார்க்கிறார்கள்.
எல்லோரும் மண்ணைக் கவ்விக் கொண்டு ஓடியிருக்கிறார்கள், ஓடுவார்கள். புத்திசாலித்தனமாக ரஜினி தப்பித்தார். இல்லையென்றால் இந்நேரம் சில நூறு கோடிகளை இழந்து தமது காயங்களை நக்கிக்கொண்டிருப்பார். சிவாஜி, ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என பலர் காயம் பட்ட அறிவுக்களம் இது. விஜய்க்கு என்ன கொடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
விஜய் சில பல நூறு கோடிகளை இழப்பாரா அல்லது பாஜகவுக்கு உள்ளடி வேலை பார்த்து தனது கருப்புப்பணத்தைக் காப்பாற்றுவாரா என்று பார்ப்போம்

Wednesday, February 1, 2023

பிபிசி தயாரித்த மோடி பற்றிய ஆவணப்படம் ஒரு நல்வரவு!

அறிவுச்சமூகத்தை நோக்கி முன்னேறுவோம் - அமுதன் ஆர்.பி.

பிபிசி தயாரித்த மோடி பற்றிய ஆவணப்படம் பலவிதங்களில் நமக்கு முக்கியமான ஆவணம்.

நாம் பல சமயங்களில் சங்கிகளுடனும் பக்தர்களுடனும் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் முட்டி மோதிக்கொண்டிருக்கும் போது எப்போதும் எல்லாத்தரவுகளுடனும் இருப்பதில்லை. நாம் ஒன்றை எழுப்பினால் சங்கிகள் இன்னொன்றைப் பேசுவார்கள். நாம் அதற்கு பதில் சொன்னால் வேறொன்றுக்குப் போவார்கள். எப்படியாவது நமது முதன்மையான புகாரிலிருந்து விவாதத்தை எங்கோ நகர்த்திச்சென்று நம்மை அயர்ச்சி அடையச் செய்வதோடு, நாம் எழுப்பிய கேள்வியின் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச்செய்வார்கள்.

மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் இந்த சித்து விளையாட்டை முறியடிக்கிறது. மோடி மேல் கணக்கில்லா குற்றச்சாட்டுக்களை வைக்காமல், குஜராத் இனப்படுகொலை, ஹரேன் பாண்டியா படுகொலை, அதைக் கேள்வி கேட்ட காவல்துறையினர் கைது, குல்பர்க் சொசைட்டியில் கலவரக்காரர்களால் தமது தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பு முதல்வர் மோடியாடு தொலைபேசியில் பேசிய முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரோடு படுகொலை செய்யப்பட்ட 60 பேர், அப்போது இங்கிலாந்திலிருந்து வந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று முஸ்லீம்களின் படுகொலை, அதில் கிடைக்காத நீதி என முதல் பாகத்தில் அளவான புகார்களை நிதானமாக, ஆதாரங்களுடன் வைக்கிறது. அது மட்டுமின்றி வைக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பாஜக பிரமுகர் ஸ்வபன் தாஸ் குப்தா, அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசாமி மற்றும் ஒரு பாஜக ஆதரவாளர் ஆகியோரது கருத்துக்களைப் பதிவு செய்கிறது. எந்தக் குற்றச்சாட்டும் மறுப்பு இல்லாமல் சேர்க்கப்படவில்லை.

இரண்டாவது பாகத்தில் மாட்டுக்கறி படுகொலைகள், காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டது, சிஏஏவிற்கு எதிரான மக்கள் போராட்டம், அதை காவல்துறையினரை, அடியாட்களை, சங்கிகளை வைத்து முறியடித்தவிதம், பல்கலைக் கழக மாணவர்கள் அவர்களது வளாகத்திற்குள்ளேயே கொடூரமாகத் தாக்கப்பட்டவிதம் என குறிப்பான சிலவற்றை மீண்டும் ஆதாரங்களுடன், மறுப்புடன், நிதானமாக, ஆழமாக இந்தப் படம் விவாதிக்கிறது.

சுயபுத்தியுள்ள, பகுத்தறிவுள்ள, குறைந்த பட்சம் சுரணையுள்ள எந்த மனிதருக்கும் இந்த இரண்டு பாகங்கள் எழுப்பும் கேள்விகளின் நியாயம் புரியும்.

இந்தப்படத்தை ஒரு வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம், அதுவும் ஆயிரக்கணக்கான ஆவணப்படங்கள் எடுத்த அனுபவம் கொண்ட பிபிசி நிறுவனம் எடுத்திருப்பதால் உள்ளூர் அரசியலின் தாக்கமில்லாமல், தள்ளி நின்று, பொதுவான மனிதர்களையும் சேரும் வண்ணம், அவர்களும் நம்பும் வண்ணம், மிகவும் கச்சிதமாக திரைக்கதை (பல தொலைக் காட்சி ஆவணப்படங்கள் எழுதித் தான் எடுக்கப்படுகின்றன) உருவாக்கமும் படத்தொகுப்பும் நிகழ்ந்திருக்கிறது. 

இந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களையும் கிளாசிகல் தொலைக்காட்சி புலனாய்வுப் படங்கள் என்று உறுதியாகத் துணிந்து சொல்லமுடியும். முக்கியமாக முரட்டு அடி, மட்டை அடி என போகிற போக்கில், அவசரகதியில், பொத்தாம் பொதுவாக எந்தக் காட்சியும் இல்லை. அதே போல ஒரு பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருப்பதால், பல தரப்பட்ட கோப்புக் காட்சிகள் பல இடங்களில் இருந்து கவனமாகச் சேகரிக்கப்பட்டு படத்தில் சரியான இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல நாடுகளுக்கு, மாநிலங்களுக்கு பல ஊர்களுக்கு இந்தப் படம் நம்மை அழைத்துச் செல்கிறது. ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதை விவாதிக்கத் தேவையான அனைத்துத் தரவுகளும் போதுமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. போதுமான நேரம் ஓவ்வொரு விவாதப்பொருளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம் என்றே சொல்லமுடியும். ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதை பட்டிமன்ற ரீதியில் கேலிக்கூத்தாக்கி, உணர்ச்சிமயமாக்கி, பேசவேண்டிய பொருட்களைப் பேசாமல், குத்துச்சண்டை மாதிரி விவாதம் நடத்தும் இவர்களுக்கு இந்த படத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன.

ஏனெனில் நம்மிடம் பணம் இருக்கிறது. ஆனால் ஆவணப்படம் எடுப்பதற்கான மெனக்கெடல் இல்லை. அது அவ்வளவு முக்கியம் என்றே நாம் நினைப்பதில்லை. கதை சொல்லியே காலம் கடத்திவிடமுடியும் என்பதால் தான் சீமான் நம் ஊரில் பெரிய அரசியல்வாதியாக இருக்கிறார்.

ஆவணம் என்பதே கூடாது என்று நினைக்கிற ஆரியக் கூட்டத்தின் அடிமைகள் தானே நாம்! எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல், காதும் காதும் வைத்த மாதிரி தானே பார்ப்பனியம் தமது ஆதிக்கத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்திவருகிறது. 

பிபிசி தயாரித்த மோடி பற்றிய இந்த ஆவணப்படம் மோடியைப் புரிந்து கொள்ள உதவுவதோடு, ஆவணப்படம் என்ற வடிவத்தையும் புரிந்து கொள்ள உதவும் என்று ஒரு ஆவணப்பட இயக்குனராக, ஆவணப்பட விழாக்களின் ஒருங்கிணைப்பாளராக, நான் உறுதியாக நம்புகிறேன்.

மீம்ஸ் மாதிரி நொடிப்பொழுது சம்பாஷனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இரண்டு மணி நேர ஆவணப்படம் வந்திருப்பதும் அது வெகுமக்களை பெரிதும் பாதித்திருப்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வெனக் கூறலாம். இப்போதெல்லாம் யார் பெரிய படங்கள் பார்ப்பார்கள் என்று வியாக்கியானம் செய்யாமல், நம்மையும் நம் சந்ததியினரையும் காக்க, இப்படி ஆழமான உரையாடல்களை நம்மிடையே உருவாக்குவோம். 

இதே போல பல புலனாய்வு ஆவணப்படங்கள் தமிழில் வரவேண்டும். அதை இங்கிருக்கும் கட்சிகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும், மக்கள் இயக்கங்களும் முன்னெடுக்கவேண்டும். வெறும் வாய்ச்சவடால்களால் தொடர்ந்து காலம் கடத்திவிடமுடியாது. குறிப்பாக அறிவே கூடாது என்று வெறித்தனமாக அரசியல் செய்யும் சங்கிகள் மத்தியில் அவர்களைப் போல வெற்றுக்கூச்சல் சாக்கடையில் விழுந்து புரளாமல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரும், சாக்ரடீசும், அரிஸ்டாட்டிலும், ப்ளேட்டோவும் உருவாக்க நினைத்த அறிவுச்சமூகத்தை நோக்கி முன்னேறுவோம்.

Thursday, October 6, 2022

இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்கள்!

இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்கள் பற்றிய ஒரு ஆய்வின் சில முடிவுகள்! 

1) இந்தியாவில் பெருவாரியான ஆண்களும் பெண்களும், வேலைவாய்ப்பு குறைவாக இருக்கும் போது ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றனர்.

2) இந்தியாவில் நான்கில் ஒரு பகுதி மக்களே, பெண்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகின்றனர் என்று கருதுகின்றனர்.

3) நான்கில் மூன்று பகுதி மக்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு பெரிய பிரச்சனை என்று கருதுகின்றனர்.

வழக்கத்தில் பெண்கள் வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் ஆண்களே வேலைக்குப் போகவேண்டும் என்று இருக்கிறது.

சம்பளத்திற்கு பெண்கள் வேலை பார்ப்பது கீழானது என்று கருதப்படுவதோடு, சமூக விழுமியங்கள் நல்ல தாயாக, மனைவியாக இருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் பெண்கள் தேர்ந்தெடுப்பதை தடுக்கின்றன.

பணியிடத்தில் பெண்களைப் பாதுகாக்க போஷ் சட்டம் 2013ல் (POSH Act 2013) நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் பல பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு அல்லது வன்முறைக்கு ஆளாகின்றனர்.

ஆண் - பெண் மக்கள் தொகை வேறுபாடும் இருக்கிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகளே பிறக்கின்றனர். பாலினத் தேர்வு கருக்கலைப்பும், சிசுக்கொலையும் இந்த வேறுபாட்டை அதிகரிக்கின்றன.

இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் சராசரி வயது 28.7 ஆகும். அமெரிக்காவில் அது 38.5 ஆக இருக்கிறது. ஆனால் வாய்ப்புகள் இல்லாததால், 15-29 வயதிற்குள் உள்ள பெண்களில் 45% பேர் படிப்பிலோ, வேலையிலோ, பயிற்சியிலோ ஈடுபடாதிருக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டு பழமையான ஜாதி முறை, சில குறிப்பிட்ட வேலைகளைத் தேர்ந்தெடுப்பதைப் பாதிக்கிறது. 

கல்வி கிடைப்பதிலும் வேலையிலும் ஜாதியப் பாகுபாட்டை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்திருந்தாலும் ஜாதியை அது தடை செய்யவில்லை.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மதரீதியான மக்கள் தொகை கீழ்வருமாறு :

இந்துக்கள் : 79.8%
இஸ்லாமியர்கள் : 14.2%
கிறிஸ்தவர்கள் : 2.3 %
சீக்கியர்கள் : 1.7%
பிற : 2%

இந்தியாவில் இருக்கும் பல இன, மத, மொழி, பண்பாடு, புவியியற் கூட்டுத்தன்மை நமது சிந்தனையில் ஒற்றை அடையாளத்திற்கு மாற்றாக பன்முகத்தன்மையைக் கொடுத்தாலும், பல்துறை குறுக்குவெட்டுப் பாகுபாடு (intersectional discrimination) சில பெண்களை மற்றவர்களை விட அதிகம் பாதிக்கிறது. 

15% இஸ்லாமியப் பெண்களே முறையான வேலைக்குப் போகின்றனர். அவர்களோடு ஒப்பிடும் போது
இந்துப்பெண்கள் : 27%
கிறிஸ்வதப்பெண்கள் : 31%
புத்தப்பெண்கள் : 33 % வேலைக்குப் போகின்றனர்.

இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாக வளர்ந்து வருகிறது. வரும் பத்தாண்டுகளில் 3 டிரில்லியினில் இருந்து 8 டிரில்லியனாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்கள், தொழில்நுட்பங்களை வசப்படுத்துதல், நகரமயமாதல், வெகுசன நுகர்வு கலாச்சாரம் மற்றும் நிதிப் பங்கீடு ஆகியவைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இருந்தாலும் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 19% பேர் மட்டுமே இந்தியாவின் (சம்பாதிக்கும்) தொழிலாளர் பட்டியலில் வருகின்றனர். ஒப்பீடு செய்யும் போது 70% ஆண்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

இந்த இடைவெளியைக் குறைத்தால் இந்தியாவின் ஜிடிபி (GDP) மூன்று மடங்காக 2050ல் வளரும் என்று கணிக்கப்படுகிறது.

பல துறைகளில் பெண்கள் மிகவும் குறைவாகவே வேலை செய்கின்றனர். 
எண்ணெய் மற்றும் வாயு துறை : 7% பேர் தான் பெண்கள்
மருந்து மற்றும் மருத்துவம் : 11%
தகவல் தொழில்நுட்பம் : 28%
வாகன உற்பத்தி : 10%

2030ல் எந்திரமயமாதலின் காரணமாக ஒரு கோடியே 20 லட்சம் பெண்கள் வேலை இழக்க வாய்ப்பிருக்கிறது.

2021ல் 4.7% இடங்களில் மட்டுமே பெண்கள் தலைமைப் பொறுப்பிலும் (CEO) 7.7% இடங்களில் மட்டுமே (நிறுவனங்களின்) நிர்வாக சபையிலும் (Board) இருக்கின்றனர். 

ஆங்கிலத்தில் : Workplaces that Work for Women
மொழிபெயர்ப்பு : அமுதன் ஆர்.பி.

https://www.catalyst.org/research/women-in-the-workforce-india/

Tuesday, July 26, 2022

போய் வாருங்கள் சக்ஸ்!

எங்களின் அன்பும் மரியாதையும் உங்களுக்கு எப்போதும் உண்டு!


வெங்கடேஷ் சக்ரவர்த்தி திரைப்பட ஆய்வு, கல்வியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தவர். அதே போல தத்துவம், உளவியல் ஆகிய புலங்களிலும் ஆர்வமுடையவர்.
மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நாங்கள் நடத்திய திரைப்படவிழாக்களில், பயிற்சிப் பட்டறைகளில் சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். எங்களது போதாமைகளை எப்போதும் மன்னித்து அன்போடு ஆதரித்திருக்கிறார்.
சென்னையில் எல்.வி.பிரசாத் திரைப்படக்கல்லூரியில் அவர் தலைமைப் பொறுப்பில் இருந்த போது எனை அழைத்து எனது படங்களைத் திரையிட்டார்.
கூடங்குளம் போராட்டம் பற்றி நான் எடுத்த ஆவணப்படத்தை ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் திரையிட்ட போது - அப்போது அங்கு ராமா நாயுடு திரைப்படக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார் - வெங்கடேஷ் சக்ரவர்த்தி வெகு தூரம் பயணம் செய்து படம் பார்க்க வந்தார். கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அன்று இரவு அவரது வீட்டில் சிறப்பான உணவும் அளித்தார்.
வெங்கடேஷ் சக்ரவர்த்தி அன்பானவர். 'என்னப்பா, எப்படி இருக்க?" என்று அவர் கேட்பது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அதே போல கோபக்காரர். கருத்து வேறுபாடு காரணமாக நண்பர்களுடன் கூட சண்டை போட்டுக்கொண்டு பேசாமலும் இருப்பவர்.
சுதந்தரமான சிந்தனையாளர். கறாரான விமர்சகர். தனது கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருந்தவர். அதனாலேயே பல காலம் நிலையான வேலையிலோ திடமான பொருளாதார நிலையிலோ இல்லாது இருந்தவர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தான் ராமா நாயுடு திரைப்படக்கல்லூரி, எல்வி பிரசாத் திரைப்படக்கல்லூரி, சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.


எனது மதுரை நண்பர்களான சுந்தர் காளி, பாபு, லோகு, சுபகுணராஜன் ஆகியோர் மூலம் தான் சக்ரவர்த்தி எனக்கு அறிமுகம். நண்பர்கள் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடத்திய பெரியார் கருத்தரங்கில் தான் சக்ரவர்த்தி அவர்களைச் சந்தித்தேன் என்று நினைவு.
தொடர்ந்து கும்பகோணத்தில் பேரா அ மார்க்ஸ் வெகுசன சினிமா தொடர்பாக நடத்திய கருத்தரங்கிற்கு நாங்கள் மதுரையிலிருந்து கூட்டமாக பேருந்தில் போனதும், அங்கே வெங்கடேஷ் சக்ரவர்த்தி தமது கட்டுரையை வாசித்ததும் நினைவுக்கு வருகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து தனது கைனடிக் ஹோண்டாவில் எனை அழைத்துப்போய் வீட்டில் சாப்பாடு போட்டு, வெகு நேரம் பல அரசியல், பண்பாட்டு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். வயது வித்தியாசம் பார்க்காது மரியாதையுடன் நடத்தக்கூடியவர்.
எனது பார்ப்பனர் எதிர்ப்பை வெகுவாகக் கண்டிப்பார். பார்ப்பனியம் வேறு பார்ப்பனர் வேறு என்று விவாதிப்பார். பரிக்‌ஷா ஞாநி, பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் பலரது நன்மதிப்பைப் பெற்றவர் என்று நான் எழுதியதைக் கடுமையாகக் கண்டித்தார்.


15 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் சாலை ஓரத்தில் ஒரு மாலையில் நல்ல புழுதி நிரம்பிய சாலையில் ஒரு தட்டுக்கடையில் குடல்கறி, தோசையை விரும்பி விரும்பி சக்ரவர்த்தி சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
கருவாடு மிகவும் விரும்பி சாப்பிடுவார். ரசித்து ருசித்து மது அருந்தக் கூடியவர்.
தமிழில் மிகவும் முக்கியமான சினிமா விமர்சகர். சிக்மண்ட் ப்ராய்டு தொடங்கி லகான் என சர்வதேச கோட்பாடுகளின் அடிப்படையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் கூடியவர். ஆங்கிலத்தில் ப்ரண்ட் லைன், இபிடபிள்யூ மாதிரியான முக்கியமான பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். ரோஜா, இருவர் ஆகிய படங்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.
தமிழில் பாரதிராஜாவின் சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமான பங்ளிப்பாகக் கருதப்படுகிறது.
சினிமாவைக் கல்விப்புலத்திலிருந்து அணுகியவர் என்றால் சக்கரவர்த்தி என்றால் மிகையாகாது.
இந்தியாவில் பல முக்கியமான கல்லூரிகளில் சினிமா தொடர்பான வகுப்புகளும் பட்டறைகளும் எடுத்திருக்கிறார்.
திரைப்பட ரசனை தொடர்பாக அவர் நடத்திய பட்டறைகளில் நான் கலந்து கொண்டு பயனடைந்திருக்கிறேன்.
நான் சென்னைக்குப் புலம்பெயர்ந்து வந்த பிறகு நடத்திய பல திரையிடல்களில், கலந்துரையாடல்களில் கருத்துரையாற்றி எங்களை ஆதரித்திருக்கிறார்.
பரிசல் செந்தில்நாதன் தமது படப்பெட்டி இதழ் சார்பாக நடத்திய கபாலி படம் தொடர்பான விவாதத்தில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி பேசியது பிடிக்காது 'ரசிகர்கள்' அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அவர் அங்கிருந்து வேகமாக வெளியேறியதும் நினைவுக்கு வருகிறது. அன்று நடந்த பரிமாற்றம் பற்றி அவர் பின்னாட்களில் என்னுடன் பலமுறை தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரது நுட்பமான கருத்துக்கள் அன்று கடும் கண்டனத்திற்கு ஆளானது அவரைத் தொந்தரவுக்குள்ளாக்கியது.
சென்னை நகரத்தின் வளர்ச்சி பற்றி வெங்கடேஷ் சக்ரவர்த்தி எடுத்த ஸ்பிலிட் சிட்டி எனும் ஆவணப்படத்தை மதுரையிலும் சென்னையிலும் கொச்சியிலும் திரையிட்டிருக்கிறேன். கொச்சியில் நான் திரையிட்ட விதம் பற்றி அவருக்கு வருத்தம் ஏற்பட்டு அது பெரிய சண்டையில் முடிந்தது. அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. என்னை முகநூலில் ப்ளாக் செய்துவிட்டார் என்று நினைவு.
அமெரிக்காவில் வாழும் மதுரை ஓவிய நண்பர் லோகு சமீபத்தில் சென்னை வந்திருந்திருந்த போது சக்ரவர்த்தியைப் பார்க்கப் போனார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அப்போதும் நான் லோகுவுடன் போய் அன்னாரைப் பார்க்க முடியவில்லை.
வெங்கடேஷ் சக்ரவர்த்தி அவர்களை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தான் அவருடனான பழக்கம் எனக்கு இருந்ந்தது என்று சொல்லலாம்.
20 ஆண்டுகளுக்கு மேலான பழக்கம் என்று சொல்லாம். என்னைப் போன்ற பலருக்கு ஆதர்சமாக இருந்தார்.
சக்ஸ் என்று பிரியமாக நாங்கள் அழைக்கும் வெங்கடேஷ் சக்ரவர்த்தி இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன்.
தமிழக அரசு அவருக்கு ஒரு விருது அளித்து மரியாதை செய்யவேண்டும். எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டிய பெயர் அவருடையது. அவருக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே சொல்வேன்.


அவரது இணையர் ப்ரீதம் ஒரு மேடைக் கலைஞர். அவரது ஒரு நபர் நாடகங்கள் மிகவும் முக்கியமானவை. திருநங்கைகள் பற்றி அவரது நாடகத்தைப் பார்த்து மயக்கம் போடாதவர்கள் குறைவு. 90களில் பூனாவில் நடந்த ஒரு மாநாட்டில் எனது தீவிரவாதிகள் எனும் தமிழ் ஆவணப்படம் திரையிடப்பட்ட போது ப்ரீதம் அவர்கள் உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததை நான் நன்றியோடு எப்போதும் நினைப்பேன். அவர்களது பெண்கள் மாளவிகாவும் சம்யுக்தாவும் கலை / ஊடகத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போய் வாருங்கள் சக்ஸ்! எங்களின் அன்பும் மரியாதையும் உங்களுக்கு எப்போதும் உண்டு.

இணைப்புகள் :



Saturday, January 8, 2022

"நமக்கு எதற்கு இவ்வளவு மின்சாரம்?" - அமுதன் ஆர்.பி.

"நமக்கு எதற்கு இவ்வளவு மின்சாரம்?"
- அமுதன் ஆர்.பி.



2012ல் கூடன்குளம் / இடிந்தகரை அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் பற்றி நான் ஒரு ஆவணப்படம் எடுத்து இந்தியா முழுக்க திரையிட்டபோது திரையிடலுக்குப் பிறகான கலந்துரையாடல்களில் பங்கேற்பாளர்கள் முதலில் அணு உலையில் ஏற்படும் விபத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். பிறகு அணு உலை இருந்தாலே கதிர்வீச்சு இருக்கும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், கடல்வளம், ஆறுகள், காடுகள், வயல்வெளிகள் பாதிப்படும், தொழிலாளர்கள், சுற்றி வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள், அணுக்கழிவுகளை அழிக்க நம்மிடம் தொழில்நுட்பம் இல்லை, அது நிரந்தரமான ஆபத்து என்று பேசுவோம்.
பிறகு மாற்று வழிகள் பற்றிப் பேசுவார்கள். சூரிய சக்தி, காற்றாலை, கடல் அலை என்று பேசுவோம். இயற்கைக்குப் பாதகம் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றி பேசுவோம்.
அதன் பிறகு நான் "நமக்கு எதற்கு இவ்வளவு மின்சாரம்?" என்று கேட்பேன். அது பலரை அதிர்ச்சிக்கு, எரிச்சலுக்கு உள்ளாக்கும். அரைவேக்காட்டுத் தனமாகப் பேசாதே என்பார்கள். அதற்காக நாம் வரலாற்றில் பின்னோக்கிப் போகமுடியுமா? இந்தத் திரையிடல் நடத்துவதற்கே மின்சாரம் வேண்டுமே என்று கேட்பார்கள். இன்னும் நிறைய கிராமங்களில் மின்சாரம் இல்லை, நமது தேவை அதிகம், இன்னும் உற்பத்தி செய்யவேண்டும் என்பார்கள்.
"நமக்குத் தேவை அதிக உற்பத்தியா? அளவான / சிக்கனமான பயன்பாடா? நியாயமான பகிர்வா?" ஆகிய கேள்விகள் எழுப்பப்படும். இரவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது ஆடம்பரம் இல்லையா? அகங்காரம் இல்லையா என்றால் மெளனமாக இருப்பார்கள். ஒரு வழியாக விவாதங்கள் மனக்கசப்பில் முடிவடையும்.
நிற்க...
"முதலாளித்துவம் தனது எல்லையை அடைந்துவிட்டது, இதற்கு மேல் மக்களை, அரசுகளை ஒடுக்குவது மற்றும் சுரண்டுவது ஆகாது, அதனால் தான் கொரொனா எனும் கிருமியை பரப்பி, கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் தாமாக முன்வந்து தமது உரிமைகளை விட்டுக்கொடுக்க, நடவடிக்கைகளைக் குறைக்க, நிர்பந்திக்கப்படுகின்றனர்" என்றார் கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.
"தொழில்நுட்ப வளர்ச்சி அரசுகளுக்கு எதிராக, அமைப்புகளுக்கு எதிராக, கார்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக செயல்பட, தங்களை ஒருங்கிணைக்க, தமக்குள் புதிய உறவுகளை ஏற்படுத்த, பலப்படுத்த மக்களுக்கு அளப்பரிய வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையில், மக்களின் செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டுவர கார்பரேட் மற்றும் அரசுகளின் கூட்டு சதியாகக் கூட இந்தப் பெருந்தொற்று இருக்கலாம்" என்று கூட சொல்லத் தோன்றுகிறது.


இன்னும் கூடுதலாக யோசித்தால்...
நாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது அத்தியாவசியம், அடிப்படைத்தேவைகள் என்று கருதிய பலவற்றை விட்டுக்கொடுத்து விட்டோம். வெளியே போகாதே என்றால் ஒத்துக்கொள்கிறோம். வீட்டுக்குள் இரு என்றால் சரி என்கிறோம். எந்நேரமும் முகக்கவசம் அணிய ஒத்துக்கொண்டிருக்கிறோம். பேருந்துகள் ஓடாது என்றால் சரி, ரயில் இல்லை என்றால் சரி, கோயில் இல்லை என்றால் சரி, கல்யாணத்திற்கு, காரியத்திற்கு கூட்டம் கூடாதே என்றால் சரி, திருவிழா கூடாது என்றால் சரி, தனியாக இருக்க ஒத்துக்கொண்டிருக்கிறோம். இருப்பதை வைத்து வாழவும் கற்றுக்கொண்டுள்ளோம்.
இதன் விளைவாக நாம் இயற்கை வளங்களைக் குறைவாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம், வாயு, திரவ, திடக் கழிவு என குறைவான கழிவுகளை உற்பத்தி செய்கிறோம், விபத்துகள் குறைந்துள்ளன, பிற நோய்களின் எண்ணிக்கை என்ன ஆகியிருக்கிறது என்று ஆய்வுகள் தான் சொல்லவேண்டும்.
கூடன்குளம் ஆவணப்படத்திற்கு எதிர்வினை ஆற்றிய நண்பர்கள் இப்போது என்ன சொல்வார்கள் என்று நான் யோசித்துப் பார்க்கிறேன். அது எப்படி மின்சாரம் இல்லாம் இருப்பது, அது எப்படி நவீன வசதி வாய்ப்புகளை அனுபவிக்காமல் இருப்பது என்று முரண்டு பிடித்தவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?
(கொரோனா பொதுமுடக்கத்தினால் தொழில் இழந்தோரை, வேலை இழந்தோரை, வாழ்விழந்தோரைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. அவர்களின் இழப்பை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். ஆனால் எதையும் குறைத்துகொள்ளமுடியாது என்று நாம் நினைத்தவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை மட்டுமே இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.)

Wednesday, March 24, 2021

மொழிபெயர்ப்புக் கவிதைகள் : அமுதன் ஆர்.பி.

 மொழிபெயர்ப்புக் கவிதைகள் : அமுதன் ஆர்.பி.



1) தூசியில் நிரந்தரமாய்

- உருதுக் கவிதை

எழுதியவர் : தரந்நும் ரியாஸ்

ஆங்கிலத்தில் : மீரான் பஞ்சாபி

 

மரங்களின் ஊடே காற்று நடனமாடும்

தோட்டங்களில் பறவைகள் பாடும்

ஆற்றுக்குள் தண்ணீர்க் கலந்தோடும்

புற்களின் மீது பனித்துளிகள் கசியும்

மலையுச்சிகளை மாலை மஞ்சள் கரைக்கும்

வயல்களின் வழியே சிறுவர்கள் ஓடி ஆடுவர்

ஜூலியட்டுகள் ரோமியோக்களைச் சந்திப்பர்

தமது குழந்தைகளுக்கு தாய்மார்கள்

தாலாட்டுப் பாடுவர்

என் இருப்பின் ஒரு கைப்பிடிச் சாம்பல்

தூசியில் நிரந்தமாய்த் தொலைந்து போகும்

 

தமிழில் : அமுதன் ஆர்.பி.

 

2) நிவாரணம் அற்றது 

- உருதுக் கவிதை

எழுதியவர் : யாக்கின்

ஆங்கிலத்தில் : எட்வர்ட் பாய்ஸ் மாத்தர்ஸ்

 

அரசனின் வீட்டை விட

என் அன்பானவளின்

நிலைப்படியையே நான் விரும்பவேன்;

தில்லியின் மாளிகைகளை விட

அவளது அழகு மறையும் சுவற்றின் நிழலையே நான் விரும்புவேன்.

வசந்தகாலம் வரை ஏன் காத்திருந்தாய்?

முட்கள் நிறைந்த சிவந்த ரோசாப்பூக்கள்

என் கைகளில்

ஏற்கனவே நிறைந்திருக்கவில்லையா?

என் இதயம் உனக்கானது,

ஆகையால் யாக்கின், யாக்கின், யாக்கின், முட்டாள் யாக்கின்

என்று எந்த இதயம் புலம்புகிறது என்பதை

நான் அறிய வேண்டாம்.

 

தமிழில் : அமுதன் ஆர்.பி.

 

3) இதோ கடவுள் வருகிறார்

- தெலுங்குக் கவிதை

எழுதியவர் : தேனேத்தி சூரி

ஆங்கிலத்தில் : வெல்சேரு நாராயண் ராவ்

 

இதோ கடவுள் வருகிறார்,

வெண்கலத்தில் உயிரற்று,

தெருவெங்கும் சுற்றி,

மரக்குதிரையில் பயணித்தபடி

அவரிடம் கூலியைப் பற்றிக் கேளுங்கள், நண்பர்களே.

நமக்குப் போதுமான உணவில்லை

என்று அவரிடம் கூறுங்கள்.

கல்லும் கறையும் என்று

சான்றோர்கள் சொல்வார்கள்.

அது உண்மையா என்று பார்ப்போம்.

தாழ்பணிந்து கேளுங்கள்,

அவர் கேட்கிறாரா என்று பாருங்கள்,

அவர் பதில் கூறாவிட்டால் போகட்டும்.

கைகளை உயர்த்துங்கள்

லட்சக்கணக்கில் ஒன்றாக

குரல்களை எழுப்புங்கள்

வானமே நடுங்கட்டும்.

அவரிடம் கூலியைப் பற்றிக் கேளுங்கள் நண்பர்களே.

நமக்குப் போதுமான உணவில்லை

என்று கூறுங்கள்.

 

தமிழில் : அமுதன் ஆர்.பி.


4) பிரியாவிடை

- அஸ்ஸாமியக் கவிதை

எழுதியவர் : ஜிபேன் நரா

ஆங்கிலத்தில் : லிரா நியோக்

 

அவள் விடைபெற்ற நாளில்

எங்கள் தங்கை தாங்கமுடியாத வெற்றிடத்தை தனது இருப்பில் விட்டுச்சென்றாள்.

தனியாகப் பாடுவது அவளுக்குப்பிடிக்கும் என்பதாலே அவளுக்கென்று ஒரு அறை கட்டப்பட்டது.

அவளது பாட்டின் சோக அதிர்வு அந்த அறையெங்கும் விரவிக்கிடக்கிறது - அது எங்களை அவ்வப்போது இப்போதும் காயப்படுத்துகிறது.

தான் காதலித்த இளைஞனோடு எங்களை விட்டு நிரந்தமாகப் பிரிந்தாள் - அதுவே வழக்கம் என்றாலும்

அதை ஏற்பது எளிதன்று.

அவளுக்கு சிமலுப் பூக்கள்* பிடிக்கும்

என்பதாலே அவள் அந்த நதியிடம் பொய் சொன்னதேயில்லை.

அந்த நதியின் கடைமடைக்குப்

பயணித்த நாளே

அவளது துயரம் வளரத்தொடங்கியது.

 

*சிமலு : பட்டுப்பருத்தி மரம்

தமிழில் : அமுதன் ஆர்.பி.

 

5) கேட்காதீர்!

கன்னடக்கவிதை:

எழுதியதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும்:

ஹச் எஸ் சிவப்பிரகாஷ்

 

எரியும் நண்பகல் அமைதிக்குள்

தண்ணீர்க் கொணர்ந்தது யார் என்று என்னைக் கேட்காதீர்

நரகத்தின் எனது சிறைக்குள் எனக்கு வெளிச்சம்

கொணர்ந்தது யார் என்று கேட்காதீர்

சிதை நிரம்பிய மயானத்திற்குக்

குளிர்காற்றைக் கொணர்ந்தது யார்

என்று கேட்காதீர்

கவிதை ஒன்றை சந்தையின் இரைச்சலுக்கும்

ஓட்டத்திற்கும் கொணர்ந்தது யார் என்று கேட்காதீர்

பஞ்சத்தால் சிதைக்கப்பட்ட என்

நிலத்திற்கு வசந்தத்தைக் கொணர்ந்தது

யார் என்று கேட்காதீர்

சிவப்பிரகாஷ் என்று சொல்லாதீர். நானில்லை, அது நீங்கள், நீங்கள் மட்டும் தான்.

 

தமிழில் : அமுதன் ஆர்.பி.

  

6) நினைவுக்குறிப்பு

- உருதுக் கவிதை

எழுதியவர் முகம்மது அல்வி

ஆங்கிலத்தில் : அனிசுர் ரஹ்மான்

 

நான் கல்லறையை அடைந்தவுடன்

எனது கைகால்களை நீட்டிக் கிடத்தினேன்

யாரும் என்னை இப்போது தொந்தரவு

செய்யமாட்டார்கள் என்று

எண்ணிக்கொண்டு

இந்த இரண்டடி நிலம் எனக்குத்தான் என்று

மண்ணாய் மாறிக்கொண்டேயிருந்தேன்

காலத்தை மறந்தபடி

ஆனால் விரைவில் என் அமைதி குலைக்கப்பட்டது

யாரோ ஒருவர் என் கல்லறைக்குள்

நுழைந்தார்

இப்போது அவரது நினைவுக் குறிப்பு

எனது கல்லறைச் சின்னத்தில்

எழுதப்படுகிறது.

 

தமிழில் : அமுதன் ஆர்.பி.

 

7) துணிதல்

டோக்ரி மொழிக் கவிதை

எழுதியவர் : பத்மா சச்தேவ்

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு : அமண்டா பெல்

 

எங்கள் குன்றின் வலப்புறமிருக்கும்

கிணற்றில் இருந்து யாரும்

தண்ணீர் குடிப்பதில்லை,

அது தெளிந்த நீருடன்

ததும்பினாலும்;

அந்தப்பக்கம் யாரும்

திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை

அதன் ஆழத்தில் ஒரு கன்றுக்குட்டி

மிதக்கும் பூக்களால் ஏமாற்றப்பட்டு

மூழ்கிப்போனதால்.

அதன் அடிஆழத்தில், பானைகளுடன் வரும் சிறுமிகளுக்காக நிழல்கள் ஏங்கும்.

பகல் வெளிச்சத்தில் முழுமையாய்த்

தம்மைப் பருகச்சொல்லித்

தண்ணீர் என்னை மன்றாடும். இரவில் நான்

அதன் இருட்டில் யாரும் காணாது

குளிப்பேன், அதன் குளுமையை என்

உள்ளங்கையில் கவர்ந்தபடி

என் வாயருகே ஏந்துவேன் -

என் தாகம் காதலைப் போல நிறைவடையாதது.

 

தமிழில் : அமுதன் ஆர்.பி.

 

8) நெடுஞ்சாலையில் புத்தர்

மலையாளக் கவிதை

எழுதியவர் : கல்பட்டா நாராயணன்

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் :

கே. சச்சிதானந்தன்

 

புத்தர் நேற்று அந்தச் சாலையைக்

கடப்பதைக் கண்டேன்.

மாலை நெரிசலில்

சாலையைக் கடக்க இயலாது

இந்தப் பக்கம்

நீண்ட காலம் காத்திருந்தேன்.

ஐம்பது அறுபது எழுபது ஆண்டு

வாழ்க்கையில்

எப்படி நாம்

ஒன்று ஒன்றரை ஆண்டு காலம்

சாலையைக் கடக்கக்

காத்திருக்கிறோம் என்பதை

நினைத்தபடி.

அவர் சாலையைக் கடந்தார்

மெதுவாக, பயமின்றி.

அவரை நான் தொடரத் தொடங்கையில்

ஒரு வாகனம் பிளிறியபடி

என்னை வேகமாய்க்

கடந்து போனது.

எந்த வாகனமும் அவருக்காக

வேகத்தைக்

குறைக்கவில்லை;

யாருமற்ற, அகலமான, எப்போதும் இருந்த

அந்தக் காட்டுப்பாதையை ஒட்டி

அவர் நடந்து போய்

மறுபக்கத்தை அடைந்தார்.

 

தமிழில் : அமுதன் ஆர்.பி.

  

9) நான் ஒரு பலி ஆட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்!

- வங்காளக்கவிதை

எழுதியவர் : ஜாய் கோஸ்வாமி

 

வெட்டு மேடையின் கீழே அந்தக் கீரையை வை

நான் ஒரு பலி ஆட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்

அது தனது முந்தைய தலை சீவலை மறந்திருக்கிறது

ஆனாலும் அதன் கழுத்தில் அந்தக் காயம் ஒரு மாலை போல பதிந்துள்ளது.

ஆங்கிலத்தில் : சம்பூர்ண சாட்டர்ஜி

 

தமிழில் : அமுதன் ஆர்.பி.

 

10) பரம்பரை

- மலையாளக்கவிதை

எழுதியவர் : ஆத்தூர் ரவிவெர்மா

ஆங்கிலத்தில் : கே.சச்சிதானந்தம்

 

கோடுகளையும் சதுரங்களையும் கொண்ட

வெள்ளை அரசின் கொடியை தாத்தா நேசித்தார்;

அவர் கிராம அதிகாரியாக இருந்தார்.

 

அப்பா ஒரு மூவர்ணக்கொடியை ஏற்றினார்.

அவர் ஒரு சுதந்தரப் போராட்ட வீரர்.

 

நான் செங்கொடியை ஏந்துகிறேன்.

 

என் பேரனின் கைகள்

ஐம்பது நட்சத்திரங்கள் கொண்ட

அமெரிக்கக் கொடியைத் தூக்கிப் பிடிக்கின்றன.

 

தமிழில் : அமுதன் ஆர்.பி.

 

Thanks to ‘100 More Great Indian Poems’, edited by Abhay K, Published by Bloomsbury, 2019.